எல்லாம் காரணத்தோடுதான்

“உன் பொண்டாட்டியால மட்டும் தான்டா இப்படி பட்ட நேரத்துலயும் உல்லாசமா மழையை ரசிக்க முடியும். போ பொயி பின்னாடி வாசல்ல பாரு. உக்காந்து குருவி காக்கானு பேசிகிட்டு இருப்பா.” அம்மா நொடித்துக்கொண்டார்.

ஸ்வாதி எங்கே என்று கேட்டதற்கு தான் இப்படி ஒரு பதில். அவரை சொல்லியும் தப்பில்லை. இவள் நடந்துகொள்ளும் விதம் அப்படி.

பின் வாசலுக்கு சென்று பார்த்தால், அம்மா சொன்னது போல கையில் தேநீருடன் மழை துளிகள் தரையில் விழுந்து சிதறுவதை ரசித்துக்கொண்டிருந்தாள்.

“ஸ்வாதி” இவன் குரல் கொடுக்கவும் திரும்பி பார்த்தவள் “வந்துடீங்களா? இருங்க உங்களுக்கு டீ எடுத்துட்டு வரேன்.” என்று எழுந்து சென்றாள். நல்ல பெண் தான். திருமணம் ஆன புதிதில் அவள் குணம் கண்டு அம்மா பெருமை பேசாத இடமில்லை. அமைதியான பெண். பெரிதும் எதிர்த்து பேச மாட்டாள். முடிந்தவரை அனைவருடனும் ஒத்துபோகவே பார்ப்பாள். சில சின்ன சின்ன வேறுபாடுகள் தவிர அவனது மண வாழ்க்கை சமூகமாகவே இருந்தது என்று சொல்லலாம். எல்லாம் கல்யாணமாகி ஒரு வருடம் வரை தான்.

ஒரு வருடம் ஆகியும் ஸ்வாதி கருத்தரிக்கவில்லை என்று அம்மா நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். அதில் ஆரம்பித்தது பிரச்சனை.

டாக்டரிடம் போகலாம் என்று அழைத்தபோது மறு பேச்சில்லாமல் கிளம்பி வந்தாள். டாக்டர் சோதித்து பார்த்துவிட்டு எந்த பிரச்சனையும் இல்லை. பொறுத்திருந்து பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த அம்மா, இரண்டாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு மீண்டும் ஆரம்பித்துவிட்டார். இந்த முறை டாக்டர்களை நம்பி பிரயோஜனமில்லை என்று கோவில்களுக்கு போக சொன்னார். அவர் சொன்ன அனைத்து கோவில்களுக்கும் முகம் சுளிக்காமல் சென்றாள் ஸ்வாதி. ஆனால் பலன் தான் இல்லை.

திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. போகாத டாக்டர் இல்லை வேண்டாத கோவில் இல்லை. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் ஸ்வாதி சிறிதும் சோர்வடையவில்லை. அதுதான் இப்போதைய பிரச்சனைக்கு காரணம். அவள் முகம் சிறிதும் கலங்காமல் இருந்தது அம்மாவுக்கு புரியவில்லை. ஏன், எனக்கும் தான்.

அம்மா சொன்ன பரிகாரங்கள் அனைத்தையும் செய்தவள் தனக்கு குழந்தை இல்லையே என்ற வருத்தத்தை சிறிதும் காட்டிக்கொள்ளவில்லை. இதுவரை ஒரு நாளும் அவள் வருந்தியோ, புலம்பியோ இவர்கள் பார்த்ததில்லை. அம்மாவுக்கு அதில் கோபம். அவள் மனமார வேண்டவில்லை என்று. எதோ ஒப்புக்கு செய்கிறாள். உண்மையான பிரார்த்தனை இல்லை. அதனால் தான் இதுவரை தெய்வம் கண் திறக்கவில்லை என்கிறார்.

இவர்கள் மட்டும் இல்லை. ஒரு நாள் ஸ்வாதியின் அம்மாவே புலம்பிவிட்டார்கள். “சரியான கல்லை பெத்திருக்கேன் போலிருக்கு. கொஞ்சமாவது தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்பது உணர்ந்து நடந்துக்குறாளா?” என்று.

என்னுடைய டீயும் உண்ண முறுக்கும் எடுத்துவந்த மனைவியிடம் கேட்டேவிட்டேன்.

“ஏன் ஸ்வாதி உனக்கு கொஞ்சம் கூட கஷ்டமா இல்லையா?”

ஒன்றுமே நடவாதது போல “எதற்கு? ” என்றாள்.

“நமக்கு குழந்தை இல்லையே என்று” என்றேன் எரிச்சலை உள்ளடைக்கிய குரலில்.

“இப்போ நான் வருத்தப்பட்டா நமக்கு குழந்தை பிறந்திடுமா?” என்று பதில் கேள்வி கேட்டாள்.

“இல்லை தான்” என்று இழுத்தேன்.

“அப்புறம் நான் வருத்தப்படுவதற்கு என்ன பிரயோஜனம்?”

“அப்படி இல்லை ஸ்வாதி. ஆனால் எல்லாரும் கேட்கும் பொது உனக்கு வருத்தமா இல்லையா?”

“நான் என்ன எல்லாருடைய வாழ்க்கையா வாழுறேன்? என்னோட வாழ்க்கை தானே.”

“அப்படி சொல்லிட முடியாதே ஸ்வாதி. நம்ம சுத்தி இருக்குறவங்க சந்தோஷமும் நமக்கு முக்கியம் இல்லையா?”

“நீங்க உங்க அம்மா எங்க அம்மா பத்தி சொல்ரீங்களா? அவங்க திருப்திக்கு தானே கோவில் குளம்னு போறோம்.”

“அப்போ நீ நிஜமான பக்கத்தில போகலையா? உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா?”

“கண்டிப்பா கடவுள் நம்பிக்கை இருக்கு. நமக்கு எது நடந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும். என்னை பொறுத்தவரை நம்மை படைத்த கடவுளுக்கு நம் வாழ்க்கை எப்படி போகணும்னு ஒரு முடிவு இருக்கும். நாம பிறக்கும் போதே அது தீர்மானிக்கப்பட்டிருக்கும். இதுவரை நமக்கு குழந்தை இல்லைனா அதுக்காக ஒரு ஓரமா உக்காந்து அழுதா ஒண்ணும் மாறாது. டாக்டர் சொல்ற அட்வைஸ் படி நடக்குறோம். எப்போ நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்னு கடவுள் முடிவு செய்யுறாரோ அப்போ கிடைக்கும். அதுவரை கடவுள் தந்த இந்த வாழ்க்கைய நன்றியோட வாழனும். எனக்கு என்ன குறைன்னு சொல்லுங்க. நல்ல புருஷன் நல்ல புகுந்த வீடு. அம்மா வீட்டுலயும் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வளவும் கொடுத்த கடவுள் எனக்கு வேற என்ன எப்போ தரணும்னு முடிவு செய்யுறாரோ அப்போ கண்டிப்பா தருவார். பொறுமையா இருக்கனும். அத விட்டுட்டு புலம்பிகிட்டே இருந்தா கிடிச்சிருக்குற சந்தோஷத்தை இழந்துடுவேன்.” சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

இவள் எப்படி இப்படி புரியாமல் நான் மழையை வெறித்திருந்த பொது “என்னங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்.” அலறல் சத்தம் கேட்டு வேகமாக உள்ளே ஓடினேன்.

அங்கே என் அம்மா அலங்கோலமாக கிடந்தார்.

“என்ன ஆச்சுன்னு தெரியலைங்க. உள்ளே வந்து பார்த்தால் இப்படி கிடக்குறாங்க.” அழுகை கலந்த குரலில் சொன்னாள் ஸ்வாதி.

அம்மாவை காரில் ஏற்றி மருத்துவமனை சென்றோம். சோதித்து பார்த்த மருத்துவர்கள் பிரஷர் தாறுமாறாக ஏறி பக்கவாதம் வந்திருக்கிறது என்று சொன்னார்கள். இடிந்து பொய் நின்ற என்னை தேற்றி அம்மாவுக்கு தேவையானவற்றை கவனித்து கொண்டது ஸ்வாதி தான்.

ஒரு வாரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். அம்மா முழுமையாக குணமாக சில மாதங்கள் எடுக்கும் என்றார்கள். வீட்டிற்கு வந்த பின் அம்மாவிற்கு பார்த்து பார்த்து பணிவிடை செய்தாள் ஸ்வாதி.

சில வாரங்கள் சென்ற பின் ஒரு நாள் அம்மாவிற்கு ஊட்டிவிட்டு வந்தவளை பார்த்து “உனக்கு கஷ்டமா இல்லையா ஸ்வாதி? ” என்று கேட்டேன்.

என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு என் அருகில் வந்தமர்ந்தாள். ” நான் உங்களுக்கு அன்னைக்கே சொன்னேன். எது நடந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு. இப்போ பாருங்க அது சரியா இருக்கு. ”

குழப்பத்துடன் பார்த்தேன். என்ன சொல்ல வரா இவ?

“இப்போ நமக்கு ஒரு குழந்தை இருந்ததுன்னு வைங்க. அதுக்கு ஒரு வயசோ ரெண்டு வயசோ இருக்கும். அவ்ளோ சின்ன குழந்தையை வச்சிக்கிட்டு என்னால் உங்க அம்மாவை பாத்துக்க முடியாது. இன்னும் சொல்ல போனா இந்த மாதிரி படுத்த படுக்கையா ஒருத்தர் இருந்தா இனபெக்ஷன் அது இது னு ரொம்ப அல்லாடி இருப்போம். இப்படி வரும்னு தான் கடவுள் நமக்கு இதுவரை குழந்தை தரலியோ என்னவோ. இப்போ பாருங்க,. என்னால நிம்மதியா அத்தைய பாத்துக்க முடியுது” கூலாக சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள். எப்படி இப்படி யோசிக்குறா. ஆச்சரியமும் பெருமையாகவும் உணர்ந்தேன். பின்னே, ஒரு பொண்டாட்டி உன் அம்மாவ பாத்துக்குறதுக்காக எனக்கு குழந்தை இல்லைனா பரவால்லைனு சொன்னா பெருமையா இருக்காதா?

முற்றும்.

Advertisements